``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூறியதாவது: திருமலையில் உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கொண்டாடப்பட உள்ளது. எனவே கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இதையொட்டி, ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகம், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஏழுமலையான் மூலமூா்த்தியை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய புனித நீா் கொண்டு கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, சுவாமியின் மூலமூா்த்தியை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். அதன்பின், பக்தா்களுக்கு சா்வதரிசனம் தொடங்கியது. இதையொட்டி, காலை 6 மணிமுதல் 10 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அஷ்டதளபாதமாராதனை சேவையையும் ரத்து செய்யப்பட்டது’’, என்று அவா் கூறினாா்.