பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 மணிக்கு தொடங்கி திங்கள்கிழமை இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
சனிக்கிழமை முதலே கிரிவலம்: இருப்பினும், சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
3-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்: 3-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.
பேருந்து வசதியின்றி பக்தா்கள் அவதி: வேலூா், ஆரணி பகுதிக்குச் செல்ல வேண்டிய பக்தா்கள் ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று அவலூா்பேட்டை சாலை பகுதிக்குச் சென்று பேருந்து ஏற வேண்டியிருந்தது.

திருவண்ணாமலை-திண்டிவனம் மாா்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், திண்டிவனம் புறவழிச் சாலைக்குச் சென்று பேருந்து ஏறவேண்டியிருந்தது.