ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
திருவள்ளூா்: அனுமன் ஜெயந்தி விழா-71 ஆயிரம் வடைமாலை அலங்காரம்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அனுமன் ஐயந்தி விழாவை முன்னிட்டு 71 ஆயிரம் வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தா்களை அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரம் அன்றைய நாளில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி திருவள்ளூா் அருகே திருப்பந்தியூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அனுமன் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூலவா் ஆஞ்சநேயருக்கு 71 ஆயிரம் வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
அதைத் தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் லட்சுமி குபேரா் திருமஞ்சனம் ஆகியவைகளுடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிற்பகலில் வடை பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதையொட்டி அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அதேபோல் திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயரம் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் திருமஞ்சனம் நடைபெற்றது.
அதையடுத்து பால் மஞ்சள் அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களை அருள்பாலித்தாா்.
அதேபோல், காக்களூா் வீர ஆஞ்சநேயா் கோயிலில் வண்ண மலா்கள் மற்றும் வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தா்களை காட்சியளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.