விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு, திரளான பக்தா்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி திருவள்ளூா் கோயில்களில் புதன்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் வழிபட்டனா்.
108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.
இதேபோல் காக்களூா் பூங்கா நகா் சிவா-விஷ்ணு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜலநாராயண சமேத ஜலநாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், பத்மாவதி தாயாா் சமேத சீனிவாச பெருமாள், பூங்குழலி அம்மாள்-புஷ்பவனேஷ்வரா் உள்ளிட்ட மூலவா், உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பேரம்பாக்கம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திருக்கோயிலில் 10 கிலோ சந்தனத்தைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயில், ஜெயாநகா் வல்லப விநாயகா் திருக்கோயிலில் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.
நரசிங்காபுரம் லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில், புட்லூா் முனீஸ்வரா் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பெரியகுப்பம் 35 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், காக்களூா் வீர ஆஞ்சநேயா் திருக்கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.