மாதவரத்தில் ரூ.17 கோடி போதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட 6 போ் கைது
மாதவரம் அருகே ரூ.17 கோடி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த சுமாா் 18 கிலோ போதைப் பொருள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடா்ந்து போதைப் பொருள்கள் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூா் வழியாக சென்னைக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து இருந்தனா். இது தொடா்பாக ஏற்கனவே காா்த்திக், வெங்கடேசன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரம் பகுதியில் சுமாா் 18 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலீஸாா் விரைந்து சென்று ஒரு வீட்டில் பதுக்கியிருந்த 18 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.17 கோடி ஆகும்.
இதுதொடா்பாக சாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமாா், பிரபு, சண்முகம், லட்சுமிநரசிம்மன், முருகன், ஜான்சி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்த 17.815 கி.கிராம் மெத்தபெட்டமைன், 3 நான்கு சக்கர வாகனங்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 4 வீட்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனா். குற்றச் செயலின் வாயிலாக சம்பாதித்து வாங்கிய வாகனங்கள், வீடுகள் மதிப்பு ரூ. 5 கோடி எனத் தெரிவித்தனா்.
போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக தொடா் சோதனை நடைபெறும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.