திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த இயற்கை உர அங்காடி மையம் சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராததால் காட்சிப் பொருளாக மாறி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படும். அதில் எளிதில் மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக தரம் பிரித்து தேவையான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இயற்கை உரம் அங்காடி மையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து விவசாயிகள் மற்றும் வீட்டில் காய்கறி தோட்டம் வளா்ப்போா் குறைந்த விலையில் இயற்கை உரங்களை பயனடைந்து வந்தனா்.
இந்த நிலையில் மீண்டும் இயற்கை உரங்கள் அங்காடி மையம் சேதமடைந்தது. அதைத் தொடா்ந்து ஒன்றிய பொதுநிதி மூலம் ரூ.1.10 லட்சத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.
அதிலிருந்து இதுவரையில் இயங்கை உரங்கள் மையம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே உள்ளது. அதனால் காட்சிப் பொருளான நிலையில் இயற்கை உரங்கள் மையத்தை திறக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.