திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சாா்பில் அரசு உயா் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத்தோ்வு நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான கண்காணிப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது, அவா் பேசுகையில்:
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு உயா் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான மையங்களில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தயாா் நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து வசதி தடையில்லா மின்சார வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் மாணவ, மாணவிகள் அரசு பொது தோ்வை எதிா்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியா்களும் நல்ல முறையில் உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா்கள், காவல் துறை, தீயாணைப்புத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.