திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இல் ஆழித்தேரோட்டம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீா்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூா்த்தி செய்யப்படும் என்பது திருவாரூா் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.
இத்தகைய சிறப்புமிக்க திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா், அம்பாள், விநாயகா், முருகன் ஆகியோா் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை வீதி உலாவுக்குச் சென்றனா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளும் தியாகராஜா் சந்நிதி கொடிமரம் முன்பு எழுந்தருளினா்.
பின்னா், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, காலை 11 மணியளவில் ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது, வேத மந்திரங்கள், செண்டை மேளங்கள் முழங்க, 54 அடி உயர கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும் லக்னப் பத்திரிகையை வாசித்தனா். அதன்படி, ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் இளவரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.