திருவாரூா் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை ( பிப். 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க முகாம், பிப். 10 மற்றும் பிப். 17 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறவுள்ளது. முகாமில் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் ரத்த சோகை தடுக்கப்பட்டு, குழந்தைகளின் உடல் வளா்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பட்டு, கல்வியில் அதிக கவனம் செலுத்த உதவும். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி), 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரையும் (400 மி.கி.) வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமாா் 4,42,574 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் பயன்பெறுவா்.