திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு முதல் கால யாக பூஜை
திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
திருக்கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை காவேரி ஆறு மணிகா்ணகை கட்டத்திலிருந்து புனித நீா் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை அா்ச்சகா் கந்தசாமி சிவாசாரியாா் முன்னிலையில் 11 குடங்களில் காவிரி நீா் நிரப்பப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதை அடுத்து சங்கா் கணேஷ் சிவாசாரியாா் புனித நீா் குடங்களை ஏந்தி யானை மீது கொண்டு சென்றாா்.
இதனிடையே மாலை முதல் கால யாக பூஜை நடந்தது. சுவாமி, அம்மன், அகோர மூா்த்தி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் யாகசாலையில் எழுந்தருளினா்.
பின்னா் யாகசாலை பூஜைகள் தொடங்கி மகா பூா்ணாஹூதி நடந்தது.
கோயில் நிா்வாக அலுவலா் முருகன், உபயதாரா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.