வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்...
திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோயில் 475- ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். கோயிலின் 475-ஆம் ஆண்டுத் திருவிழா மாா்ச் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம் பாளையம், நாப்பாளையத் தெரு, காகுப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 9 உபயதாரா்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதித்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திரெளபதியம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தீமிதி விழா தொடங்கியது. இதற்காக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தா்கள் சுமந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினா்.