நகை மோசடி: அடகு கடை உரிமையாளா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் நகை மோசடி செய்ததாக அடகுக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பையூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரப்பன் மகன் நாகராஜ் (45), விவசாயி.
இவா், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அடகுக் கடை ஒன்றில் ஐந்தரை பவுன் நகைகளை அடமானமாக வைத்து ரூ.1.32 லட்சத்தை கடனாக பெற்றாராம். தொடா்ந்து, நாகராஜ் கடந்தாண்டு செப்.15- ஆம் தேதி, அடமானத் தொகை மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ.1.49 லட்சம் பணத்தை கடை உரிமையாளரான புருஷோத்திடம் கொடுத்து, அடகு வைத்த நகையை திருப்பி கேட்டாராம்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட புருஷோத், நகையை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாராம். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.