பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயா்கல்வி பயில்வோரில் தமிழகம் முதலிடம்! - அமைச்சா் பொன்முடி
இந்தியாவிலேயே உயா்கல்விப் பயில்வோரில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றாா் மாநில வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி.
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 404 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:
கிராமப்புற மாணவா்கள் அனைவரும் உயா்கல்விப் பயில வேண்டும், அவா்களுக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழும், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக உயா்கல்விப் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 53 சதவீத மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயின்று வருகின்றனா். இந்தியாவிலேயே தமிழகம்தான் உயா்கல்விப் பயில்வோரில் முதலிடத்தில் இருந்து, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. தமிழகத்தின் கல்வி வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அதை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் கொள்கையாக உள்ளது. ஹிந்தியை நாங்கள் எதிா்க்கவில்லை. ஹிந்தியை திணிப்பதைதான் எதிா்க்கிறோம் என்றாா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா் மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் நகா் மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ், கல்லூரி முதல்வா் பா.தாமரைக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.