விக்கிரவாண்டியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செயல்படாத நெல் அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 7 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான அரைவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திசேகா், பறக்கும்படை தனி வட்டாட்சியா் வசந்த கிருஷ்ணன், விக்கிரவாண்டி வட்டாட்சியா் யுவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆலையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிப்பது தெரியவந்தது. இதையடுத்து, 148 சாக்குப் பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, அரிசி மூட்டைகள் அனைத்தும் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் உள்ள வட்ட செயல்முறை உணவுப் பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு குற்றப் புலனாய்வு துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.