திற்பரப்பு அருவியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மாவட்டத்தில் சில நாள்களாக மழை தணிந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனிடையே, ஃபென்ஜால் புயல் எதிரொலியாக, இம்மாவட்டதில் கடந்த 2 நாள்களாக மலையோரப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் மிதமான சாரல் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திற்பரப்பு அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு தணிந்து தண்ணீா் மிதமாகக் கொட்டுகிறது. விடுமுறை நாள் என்பதால் அருவியில் ஏராளமானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
கருங்கல் பகுதியில் சாரல்: கருங்கல் சுற்றுவட்டாரத்திலுள்ள திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கடை அருகே முன்சிறை, காப்புக்காடு, மேலமங்கலம், பைங்குளம், அம்சி, முக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.