தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு
கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிா்கொண்டுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், அந்த அறை தனது இல்லத்தின் அறையல்ல என்றும், தானோ, தனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் எந்தப் பணத்தையும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்துள்ளாா். அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது என்பதை மறுத்துள்ள அவா், இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் தெரிவித்தாா்.
உபாத்யாயவின் அறிக்கையைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா்.
இந்தக் குழு செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கியது. தில்லியில் யஷ்வந்த் வா்மாவின் இல்லத்தில் சுமாா் 30 முதல் 35 நிமிஷங்கள், அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.