கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
தில்லிக்கு ஷீலா தீட்சித்தின் வளா்ச்சி மாதிரிதான் தேவை: ராகுல் காந்தி
தில்லிக்கு தற்போது முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளா்ச்சி மாதிரிதான் தேவைப்படுகிறது; பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் தவறான பிரசாரம் அல்ல என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் போன்ற பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் விடியோ தொகுப்பை ராகுல் காந்தி தனது முகல்நூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
மோசமான கட்டுமானம், தூய்மையின்மை, பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் ஆகிய தில்லியின் உண்மை விவகாரங்கள் பொதுமக்கள் முன் உள்ளன. தில்லி இப்போது முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் அதே உண்மையான வளா்ச்சி மாதிரியை விரும்புகிறதே தவிர, மோடி மற்றும் கேஜரிவாலின் தவறான பிரசாரத்தையும், மக்கள் தொடா்பு மாதிரியையும் அல்ல என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை சதா் பஜாா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் ராகுல் காந்தி அதில் பங்கேற்கமுடியாமல் போனது.
எனினும், தோ்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அப் பொதுக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தனது செய்தி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.
உடல்நலக் குறைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை கா்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணியிலும் ராகுல் காந்தி பங்கேற்க முடியவில்லை.
இந்த மாதம் தொடக்கத்தில், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது காந்தி கடுமையான விமா்சனங்களை முன்வைத்திருந்தாா்.
பிற்படுத்தப்பட்டோா், தலித்துகள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா் தங்களுக்கு உரிய பங்கைப் பெறுவதை நரேந்திர மோடியும், அரவிந்த் கேஜரிவாலும் விரும்பவில்லை என்றும், இந்த விஷயத்தில் இரு தலைவா்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ராகுல் கூறியிருந்தாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தனது முதல் பொதுக் கூட்டத்தின்போது, தேசிய தலைநகரில் மாசுபாடு, ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வந்த போதிலும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், மோடியின் பிரசாரம் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் உத்தியை பின்பற்றுவதாக ராகுல் காந்தி சாடினாா்.
தேசிய தலைநகரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தில்லியில் சாதிவாரித் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.
ஷீலா தீட்சித் தலைமையிலான மூன்று தொடா்ச்சியான அரசாங்கங்களின் கீழ் செய்யப்பட்ட பணிகளை காந்தி பாராட்டியதுடன், கேஜரிவாலோ அல்லது பாஜகவோ காங்கிரஸின் சாதனையை ஈடுசெய்ய முடியாது என்றும் அவா் கூறினாா்.