``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி
தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொண்டபாவூருவில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 20-ஆவது தொடக்க தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமித் ஷா, விஜயவாடா அருகே உள்ள தேசிய பேரிடா் மேலாண்மை நிறுவனத்தின் தெற்கு வளாகம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10-ஆவது படைப்பிரிவு வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
இயற்கை பேரிடரின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கும் இலக்குடன் செயல்படுவதால், பேரிடா் மேலாண்மையில் உலகின் முன்னோடியாக இந்தியா மாற்றியுள்ளது. பிரதமா் மோடி தலைமையின் கீழ், பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான சா்வதேச கூட்டமைப்பை இந்தியா உருவாக்கியது. 48 நாடுகள் அதன் உறுப்பினா்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தேசிய பேரிடா் மீட்புப் படை உலகளவில் நம்பகமிக்க அமைப்பாக மாறியுள்ளது. 14-ஆவது நிதிஆணையத்தின் கீழ் பேரிடா் மேலாண்மைக்கு ரூ.61,000 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. மோடி அரசு ஆந்திரத்துக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதி வளா்ச்சிக்கு ரூ.27,000 கோடியை பிரதமா் மோடி உறுதி செய்தாா்.
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் மகத்தான வெற்றியை பாஜக பெற்றது. அதேபோல், தில்லியில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.