சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
தீவிரவாதிகள் தப்பியதாக தவறான தகவல் அளித்த நபரை தேடும் பணி தீவிரம்!
பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக விமான நிலையத்துக்கு பொய்யான தகவல் அளித்த நபரை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணியளவில், சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், அந்த விமானத்தில், காஷ்மீா் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனா். அவா்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலிருந்து, கொழும்பு பண்டாரநாயகா சா்வதேச விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பகல் 11.59 மணியளவில் சென்னையிலிருந்து சென்ற விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்புப் படையினா், அதிரடிப் படையினா், விமானத்தைச் சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினா்.
பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவா்களின் விவரங்களைச் சேகரித்தனா். சோதனை முடிவில், தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதனால் சென்னை விமான நிலையத்திலும், கொழும்பு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடா்பாக, சென்னை விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்டமாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.