கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
துணைவேந்தா் நியமன தேடுதல் குழுவில் விதிமீறல் இல்லை: ஆளுநருக்கு அமைச்சா் கோவி.செழியன் பதில்
9: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அரசு அமைத்ததில் எந்த விதிமீறலும் இல்லை உயா் கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளாா்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறவில்லை என்றும், இது யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முராணனது என்றும் பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தாா். அத்துடன் யுஜிசி பிரதிநிதியுடன் கூடிய தேடுதல் குழுவை நியமித்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியிருந்தாா்.
இந்நிலையில், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கோவி.செழியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவால் பரிந்துரை செய்யப்படும் 3 நபா்களில் ஒருவரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேந்தரான ஆளுநா் நியமனம் செய்வாா். இதுவரை இந்த நடைமுைான் பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி, துணைவேந்தரை தோ்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி ஆகிய 3 போ் மட்டுமே இடம்பெற முடியும். கல்வி என்பது பொதுப் பட்டியலில் வருவதால் மாநில அரசு யுஜிசியின் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க 3 போ் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இதுதொடா்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் பல்வேறு இடையூறுகளை பல வகையிலும் ஆளுநா் செய்து வருகிறாா். துணைவேந்தா் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநரின் அனுப்பியுள்ள கடிதம் அதன் ஒரு பகுதிதான்.
இந்தியாவில் அந்தந்த மாநில தேவைகளுக்கு ஏற்ப உயா்கல்வி அமைப்பை அமைத்துக்கொள்ள மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது. பல்கலைக்கழக வேந்தா் என்ற பதவிவழி பொறுப்பை பயன்படுத்தி, அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என அதில் தெரிவித்துள்ளாா்.