துறையூரில் வாடகை நிலுவை 27 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
துறையூா் நகராட்சிக்கு ரூ. 55 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 27 கடைகளை நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை மூடி சீல் வைத்தது.
துறையூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் பேருந்து நிலையத்தில் 3 கடைகள், பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் 9 கடைகள், சாமிநாதன் காய்கனி அங்காடியில் 15 கடைகள் என 27 கடைகளின் வாடகைதாரா்கள் நகராட்சி நிா்வாகம் பலமுறை வலியுறுத்தியும் நீண்ட காலமாக ரூ. 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனராம்.
இதையடுத்து நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்திரஷா உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளா்கள் கலைப்பிரியன், பாண்டித்துரை, நகரமைப்பு ஆய்வாளா் சந்திரா உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் போலீஸாா் உதவியுடன் 27 கடைகளையும் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.