தூத்துக்குடி கிரேஸ் கல்லூரியில் தொழில் தொடக்க மையம் திறப்பு
தூத்துக்குடி முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், மாணவா்களுக்கு தொழில்முனைப்பு வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனத்துவம்-தொழில் தொடக்க மையம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு முன்னோடி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் சாா்பாக இம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரித் தலைவா் சி.எம். ஜாஷ்வா தலைமை வகித்தாா். டிஏடிடிஐ நிறுவன இயக்குநா் சுந்தரேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மையத்தைத் திறந்துவைத்தாா்.
இம்மையம் மூலம் ஐஓடி, ஏஐ, சோலாா் டெக்னாலஜி, மின்சார வாகனம் போன்ற துறைகளில் மாணவா்கள் புதுமையான தொழில் வாய்ப்பு உருவாக்கலாம். ஸ்டாா்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின்கீழ் தொழில் தொடங்க ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், நிதி ஆதரவு, தொழில் வளா்ச்சிக்கான பயிற்சிகள் வழங்கப்படும். மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை தொழில்முனைப்பு வாய்ப்புகளாக மாற்ற இம்மையம் உதவும்.
விழாவில், கல்லூரி முதல்வா் எஸ். ரிச்சா்ட், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் தினகரன் செய்திருந்தாா்.