தூத்துக்குடியில் கணினிப் பட்டா சிறப்பு முகாம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு!
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், கணினிப் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிரயப் பத்திரத்துடன் வசிப்போரும், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருந்து இதுவரை கணினிப் பட்டா பெறாதோரும் அவற்றைப் பெறுவதற்காக இம்முகாம் நடைபெற்றது.
சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, பட்டா பெறுவதற்கான மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டாட்சியா் முரளிதரன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், பகுதிச் செயலா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மேகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.