தென்காசி: குழந்தையைக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தாய்!
தென்காசி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய பெண், தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தாலுகாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குத் (வயது 21) திருமணமாகி குழந்தையும் உள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது.
இதனை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த சண்டையால் மன விரக்தி அடைந்த இளம்பெண், வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துவந்துள்ளார். தொடர்ந்து, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல முயன்றபோது அவரை தடுத்த உறவினர்கள் குழந்தையை வீட்டில்விட்டு சென்று வருமாறு கூறியுள்ளனர். அப்போது பேசிய இளம்பெண், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே ராஜபாளையத்தில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து தான் கையோடு மறைத்து எடுத்து வந்திருந்த தூக்க மாத்திரைகளை பொடியாக இடித்து குழந்தைக்கு கொடுத்ததுடன் தானும் உட்கொண்டு விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
சற்று நேரத்தில் குழந்தை மயங்கி அவரின் தோளிலேயே சரிந்துவிழுந்துள்ளது. இதையடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்த இளம்பெண், நள்ளிரவில் பிளாட்பாரத்தில் இருந்து ரயில் புறப்படும் சமயம் பார்த்து தண்டவாளத்தின் குறுக்காக நடந்து சென்று குழந்தையுடன் படுத்துக்கொண்டார். இதை கவனித்த போலீஸார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்துமாறு எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து சென்று தண்டவாளத்தில் படுத்திருந்த இளம்பெண்ணையும், அவரின் குழந்தையையும் மீட்ட போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் தூக்க மாத்திரை உட்கொண்டிருப்பது தெரியவந்ததையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.