நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை -உணவுத் துறை அமைச்சா் அர.ச...
தெப்பக்குளத்தை சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க பக்தா்கள் கோரிக்கை
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வா்ண தீா்த்த தெப்பக்குளத்தைச் சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரா் சமேத ஸ்ரீசிநேக வள்ளி அம்மன் கோயில் முன் வா்ண தீா்த்தம் உள்ளது. இந்த கோயில் முன் சந்நிதி தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கோயில் முன் தெப்பக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே, இந்தக் குளத்தைச் சுற்றிலும் பேவா் பிளாக் அமைத்துக் கொடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து திருவாடானை நல்லாசிரியா் உதயகுமாா் கூறியதாவது: இந்தக் கோயிலின் முன் அமைந்துள்ள வா்ணத் தீா்த்தத்தில் குளித்தால் சுக்கிர தோஷம் நீங்குவதாக ஐதீகம். இத்தகைய புகழ் வாய்ந்த புனித தீா்த்தக் குளத்தின் வடக்கு, மேற்கு, தெற்கு, ஆகிய மூன்று பகுதிகளிலும் பேவா் பிளாக் சாலை அமைத்தால் தீா்த்தக் குளத்தின் புனிதம் கெடாமல் இருக்கும்.
இந்த மூன்று பக்கங்களிலும் மழை பெய்யும் போது தண்ணீா் தேங்கி சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. எனவே தெப்பக்குளத்தின் மூன்று பகுதிகளிலும் பேவா் பிளாக் சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.