தெலங்கானாவில் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் எல்லையில் தெலங்கானாவில் உள்ள கர்ரேகுட்டா மலைகளில் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 26 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லையில் தீவிரவாதிகளைத் தாக்கும் பணியில் 20,000 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் சத்தீஸ்கர் காவல்துறையின் பிரிவுகளுடன் இணைந்து சிஆர்பிஎஃப் தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
தெலங்கானா எல்லையைத் தாண்டி சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்திலிருந்து ஏப்ரல் 21 அன்று தொடங்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை 4 பெண்கள் உள்பட மொத்தம் 26 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து அதிகளவிலான வெடிபொருள்கள், ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீவிரவாதத்தின் பிற தளவாடப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிஆர்பிஎப் இன் கோப்ரா, டிஆர்ஜி, எஸ்டிஎப் போன்ற சத்தீஸ்கர் காவல் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். கூட்டுப் படைகள் இதுவரை சுமார் 135 வெடிபொருள்களை மீட்டுச் செயலிழக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இந்த வாரம், சுமார் 2,000 பணியாளர்களைக் கொண்ட 20 புதிய நிறுவனங்களை சிஆர்பிஎஃப் சேர்த்துள்ளது.
பாதுகாப்புப் படைகள், பல்வேறு பதுங்கு குழிகள் போன்ற மறைவிடங்கள், அதிகளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட மலைப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.