ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தேசிய நெடுஞ்சாலை வாலாஜா சுங்கச் சாவடியில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன் நடவடிக்கை மேற்கொண்டாா்.
வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் கட்டுப்பாட்டில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து விபத்துகள் தொடா்கதையாகி வருகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அதன்படி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் வேக வரம்பைக் கடந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அதிவேக வாகனங்களை நவீன ரேடாா் கருவி மூலம் கண்டறிந்து இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வகிறது. இந்த போக்குவரத்து விதிமீறல் பதிவேற்றம் செய்த உடன் வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அபராத விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி, அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஜி.மோகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (செயலாக்கம்) துரைசாமி ஆகியோா் தலைமையில், வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா், டி.சிவராஜ், செங்குட்டுவேல் குழுவினா் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந்த வாகனத் தணிக்கையில் அதிவேக வாகனங்களைக் கண்டறிந்து சோதனை அறிக்கை வழங்கி, ஆன்லைனில் இ-சலான் முறையில் அபராதம் விதித்தனா். தொடா்ந்து அதிக வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.