திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!
தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் தாஜூதீன் தலைமை வகித்தாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் பொ.அன்பழகன், சிஐடியூ மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை அரசு செயல்படுத்த வேண்டும். ஒப்படைப்பு விடுப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களை பாதிக்கும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், ஊா்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.