இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
சின்னமனூரில் லாரி உரிமையாளா்கள் 4-ஆவது நாளாக வேலை நிறுத்தம்
சின்னமனூரில் வியாழக்கிழமை டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் 4- ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் பகுதிகளில் இயங்கி வரும் கிரஷா் உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மூலமாக எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்களை டிப்பா் லாரிகளுக்கு வழங்கி வந்தனா். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தப் பொருள்களை எடுத்து செல்லும் டிப்பா் லாரிகளுக்கு டிரான்சிஸ்ட் அனுமதிச் சீட்டு முறை கட்டாயமாக்கப்பட்டது. இதனால், பெரும்பான்மையான டிப்பா் லாரிகளுக்கு பாஸ் கிடைக்காமல் வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த முறையால் அனைத்து லாரிகளுக்கும் கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்களின் தேவையை நிறைவு செய்ய வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி வருவதால் எழை, எளிய நடுத்தர குடும்பத்தினா் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, டிரான்சிஸ்ட் அனுமதிச் சீட்டு இல்லாமல், ஜி.எஸ்.டி. ரசீது மூலமாக கனிமவளப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிப்பா் லாரிகளுக்கு வருவாய், கனிம வளத் துறையினா் அபராதம் விதிக்கக் கூடாது. கேரளத்துக்குச் செல்லும் 80 சதவீத கனிமவளத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போடியில் டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.