தேவாரம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்
பொங்கல் திருநாளையொட்டி, திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டிப் பந்தயம் சின்னமாடு, பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றன.
சின்னமாடு பிரிவில் 12 ஜோடி காளைகளும், பெரியமாடு பிரிவில் 23 ஜோடி காளைகளும் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சின்ன மாடு பிரிவுக்கு 5 கீ.மீ. தொலைவும் எல்லையாக நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்தப் பந்தயத்தை திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல் தொடங்கி வைத்தாா்.