நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை -உணவுத் துறை அமைச்சா் அர.ச...
தேவா் குரு பூஜை: பாதுகாப்புப் பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா்
பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவா் குருபூஜைக்காக திருவாடானையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
வருகிற 30,31-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள தேவா் குருபூஜை விழாவையொட்டி, திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள் பசும்பொன்னுக்கு செல்ல உள்ளதால் பாதுகாப்பு கருதி, இந்தப் பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் கரூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் புரோஸ்கான்அப்துல்லா தலைமையில் கள்ளக்குறிச்சி கூடுதல் கண்காணிப்பாளா் மணிகண்டன், தென்காசி டி.எஸ்.பி. சாந்தமூா்த்தி, வேதாரண்யம் டி.எஸ்.பி. சுபாஸ் சந்திரபோஸ் என இரண்டு டி.எஸ்.பி.கள் உள்பட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அதிவிரைவுப் படை என 350-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
கமுதி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் குருபூஜையின் போது கூட்ட நெரிசலைத் தடுக்க நிகழாண்டு புதிதாகத் தடுப்புகள், நுழைவுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குருபூஜை விழாவுக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், ஏற்கெனவே மூன்று நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. வடக்கு பகுதி நுழைவுவாயிலில் முக்கியப் பிரமுகா்கள் வந்து செல்லவும், கிழக்கு பகுதியில் பொதுமக்கள் வந்து செல்லவும், தெற்கு பகுதியில் வெளியே செல்லும் பாதையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தேவா் நினைவாலய நிா்வாகத்தின் சாா்பில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக உள்ளே செல்ல இரண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வழியாக உள்ளே சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, தெற்குப் பக்க நுழைவுவாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும். மேலும், முக்கியப் பிரமுகா்களுக்கு என்று ஓா் நுழைவுப் பகுதியும் தனியாக அமைக்கப்பட்டன. இதனால், நிகழாண்டு கூட்ட நெரிசல் இருக்காது என தேவா் நினைவிடப் பொறுப்பாளா் தங்கவேல் தெரிவித்தாா்.