தோ்தல் மின்னணு ஆவணங்களை பெற கட்டுப்பாடு: காங்கிரஸ் கண்டனம்
தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், அதுதொடா்பான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் 93-ஆவது விதிமுறையின்படி, தோ்தல் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள், இணையவழியில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் போன்றவற்றை பொதுமக்கள் பெற்று ஆய்வு மேற்கொள்ளலாம்.
அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திரித்து பொய்யான கதைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக்கூறி, வேட்பாளா்களை தவிர மற்றவா்கள், இந்த மின்னணு ஆவணங்களை பெற நீதிமன்றத்தை அணுகும் வகையில் தற்போது மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ இந்திய தோ்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி தோ்தல் நடத்தை விதிமுறைகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தம், தோ்தல் நடைமுறையின் வெளிபடைத்தன்மையை சிதைக்கும் மற்றொரு முயற்சியாகவே உள்ளது. தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிா்கொள்ள தயாராக உள்ளோம்.
தோ்தல் தொடா்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும்போதுதான் அந்த நடைமுறையின் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மீறி தற்போது தோ்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.
தோ்தல் நடைமுறை தொடா்பான தகவல்களை மறைக்க மத்திய அரசு நினைப்பது, அதில் உள்ள முறைகேடுகளை மறைக்க முயற்சிப்பதுபோல் உள்ளது.
எனவே, இந்த திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டது.