கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே ப...
தொடர்ந்து இலக்காகும் முதியவர்கள்.. டிஜிட்டல் முறையில் கைதுசெய்து கோடிக்கணக்கில் சுருட்டும் கும்பல்!
மும்பையில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைதுசெய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மும்பை மக்கள் இந்த மோசடியில் பல கோடி ரூபாயை இழந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பிபின் ஷா (68) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நம்பரில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், `உங்களது ஆதார் கார்டைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட வங்கிக் கணக்கு, பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது' என்று தெரிவித்தார். அதே நபர் வீடியோ காலில் வந்து பிபின் ஷாவின் ஆதார் கார்டு எண்ணை காட்டி வாசித்தார். அது பிபின் ஷாவிற்குச் சொந்தமானது ஆகும். ஆனால் பிபின் ஷா தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். வீடியோ காலில் பேசிய நபர், போலீஸ் உடையில் இருந்தார். இதனால் பிபின் ஷா பதற்றமாகிவிட்டார்.
இவ்விவகாரத்தில், உங்களுக்காக பேச வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும், அப்படி முடியாவிட்டால் உங்களுக்காக நானே வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறேன் என்று வீடியோ காலில் பேசிய நபர் தெரிவித்தார். பிபின் ஷாவை 4 மணி நேரம் டிஜிட்டல் முறையில் கைதுசெய்த அந்த நபர், இவ்வழக்கை முடிக்கப் பேரம் பேசினார். இறுதியில் இந்த வழக்கை முடித்து வைக்க 8.5 லட்சம் ரூபாயை அந்த நபர் சொன்ன வங்கிக் கணக்கிற்கு பிபின் ஷா டிரான்ஸ்ஃபர் செய்து கொடுத்தார். அதன் பிறகுதான் பிபின் ஷாவின் மகள் வீட்டிற்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை பிபின் ஷா தெரிவித்தார்.
உடனே தன்னுடைய தந்தை ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக மலாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்ட போலீஸார், முதியவர் எந்த வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அந்த வங்கிக் கிளையை தொடர்பு கொண்டனர்.
சூரத்தில் அந்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு இருந்தது. அந்த வங்கிக் கணக்கில் இருந்து ஏற்கெனவே சிறிது பணம் எடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து எஞ்சிய பணத்தை எடுக்க கிரிமினல்கள் வருவார்கள் என்று நினைத்த போலீஸார், அந்த வங்கிக் கணக்கை முடக்கினால் சுதாரித்துவிடுவார்கள் என்பதால் வங்கிக் கணக்கை முடக்கவில்லை. இரவோடு இரவாக மும்பை போலீஸார் சூரத் சென்றனர். அவர்கள் வங்கியில் காத்திருந்தனர். போலீஸார் எதிர்பார்த்தது போன்று கிரிமினல்கள் பணம் எடுக்க வந்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து கைதுசெய்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.
ரூ.1.75 கோடி இழந்த முதியவர்
தற்போது அது போன்ற மேலும் ஒரு மோசடி நடந்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் 60 வயது பெண்ணிற்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் ஒருவர் போன் செய்து, தான் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் பார்சல் ஒன்று பேங்காக்கிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த பார்சலில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, போதைப்பொருள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தான் எந்த வித பார்சலும் அனுப்பவில்லை என்று தெரிவித்தார்.
அதன் பிறகு டெல்லி சைபர் பிரிவு போலீஸார், சி.பி.ஐ மற்றும் நிதித்துறை அதிகாரிகள் என ஒவ்வொருவராக பேசினர். அவர்கள் விசாரணை முடியும் வரை உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஆர்.பி.ஐ வங்கிக் கணக்கிற்கு மாற்றுங்கள் என்று கூறி, மோசடி பேர்வழிகள் சில வங்கிக் கணக்குகளை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அப்பெண்ணும் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் பணத்தை அனுப்பினார். அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்ட பிறகுதான் இது மோசடி என்பதை அப்பெண் உணர்ந்து, இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். மொத்தம் ரூ.1.75 கோடியை அப்பெண் இழந்துள்ளார்.