திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்: அண்ணாமலை
தொடா் விடுமுறை எதிரொலி: ஒசூா் அருகே தமிழக எல்லையில் வாகன நெரிசல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலா் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் ஒசூா் அருகே தமிழக எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நிகழாண்டு வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொங்கல் திருநாள், புதன்கிழமை (ஜன. 15) திருவள்ளுவா் தினம், வியாழக்கிழமை (ஜன. 16) காணும் பொங்கல் வருகிறது. இதனால், வரும் வாரம் திங்கள்கிழமை தொடங்கி அந்த வாரம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள், தொழிலாளா்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.
சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவா்கள், வேலை செய்யும் தொழிலாளா்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். கா்நாடக வாழ் தமிழா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல தொடா்ந்து தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனா்.
இதனால் தமிழக-கா்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடா்ந்து வந்த வண்ணம் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிக வாகனங்கள் வந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டு பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் தொடா்ந்து அணிவகுத்து மெதுவாக ஊா்ந்து சென்றன. இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டும் பணியும் தற்போது நடைபெற்று வருவதால், வாகன நெரிசல் கூடுதலாக ஏற்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் உள்ள சோதனைச் சாவடி, தமிழகத்தில் ஒசூா் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீா்செய்யும் பணியில் ஒசூா், சிப்காட் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
எனினும் வாகன நெரிசல் அதிகம் இருப்பதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. வெகு தூரம் பயணம் செய்யும் தொழிலாளா்கள், மாணவா்கள் இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் மேலும் கூடுதல் நேரம் ஆவதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். ஒசூா் நெடுஞ்சாலையில் தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.