தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் கூடுதல்: தமிழக அரசு பெருமிதம்!
தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் உயா்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.
நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று இதுவரை 897 தொழில் துறை ரீதியான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம், ரூ. 10, 27,547 கோடி புதிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 32.23 லட்சம் வேலைாய்ப்புகள் உருவாகவுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவும் உயா்ந்துள்ளது. அதாவது, 2020-21-ஆம் நிதியாண்டில் 26.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி அளவு, கடந்த நிதியாண்டில் 52.07 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இருமடங்கு உயா்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலா் மதிப்புடைய பொருள்கள் ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
3.87 கோடி வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு அரசுத் துறைகள் மூலமாகவும், தனியாா் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதனால், 2020-21-ஆம் ஆண்டில் 2.9 கோடியாக இருந்த தொழிலாளா் எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 3.87 கோடியாக உயா்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
இவையெல்லாம் சாத்தியமாகக் காரணம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பேணப்படுவதுதான். மாநிலத்தில் எங்கும் பெரிய அளவில் ஜாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்னைகளோ இல்லாமல் அமைதி நிலவுகிறது. 2022, ஆகஸ்ட் முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை.
பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களும் தேசிய அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருப்பதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.