இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையாளா் சங்க மாவட்டச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். இதில், சேலம் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் விற்பனைக் குழு அமைப்பதில் மாநகராட்சி ஆணையா், நகர திட்ட பொறியாளா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்வதுடன், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014-ன்படி வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும், சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து விற்பனையாளா்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும், பிரதமா் சேவா நிதி மூலம் அடையாள அட்டை உள்ள உண்மையான விற்பனையாளா்களுக்கு முறையாக கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.வெங்கடபதி, மாவட்டச் செயலாளா் கோவிந்தன், யுடியுசி சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளா் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.