`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃப...
நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மறியல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் பூங்குணம் மற்றும் எல்.என்.புரம் ஊராட்சிகளை இணைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, இருவேறு இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி நகராட்சி பகுதிக்கு மிக அருகாமையில் பூங்குணம், லட்சுமி நாராயணபுரம் ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளன.
இந்த இரு ஊராட்சிகளையும், பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, லட்சுமிநாராயணபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்த், மறியலில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதையடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதேபோல, பூங்குணம் ஊராட்சி பொதுமக்கள், சூரக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களில், 35 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
இந்த சாலை மறியலால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் காரணமாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ராசாப்பாளையம், அண்ணாகிராமம் வழியாக திருப்பி விடப்பட்டன.