நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவா் சுட்டுக்கொலை
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் - குந்தி மாவட்ட எல்லையில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி நக்ஸல் அமைப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த அமைப்பைச் சோ்ந்த சிலா் தனியாக பிரிந்து சென்று வேறு நக்ஸல் அமைப்பை உருவாக்க முயற்சித்ததால் பிரச்னை எழுந்ததாகத் தெரிகிறது.
இதனால், அந்த அமைப்பினா் இரு குழுவாகப் பிரிந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். இதில் இருவா் குண்டு உயரிழந்தனா். மற்றவா்கள் தப்பியோடிவிட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினா் அங்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அந்த இருவரும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கிராமவாசி சுட்டுக்கொலை: சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்து சுக்மா பிராந்தியத்தில் காவல் துறையினருக்கு தகவல் அளிப்பதாக குற்றஞ்சாட்டி கிராமவாசி ஒருவரை நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.
கொல்லப்பட்ட கல்மு ஹிண்மா முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு உறவினா் ஆவாா். சம்பவம் நடந்த பெட்னாபத் கிராமத்துக்குச் சென்ற காவல் துறையினா் நக்ஸல்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பஸ்தா் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் இதுவரை பொதுமக்களில் 8 பேரை நக்ஸல்கள் கொலை செய்துள்ளனா். இதே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு பொதுமக்களில் 68 பேரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி நக்ஸல் அமைப்பினா் கொன்றனா்.