நடிகை புகார்: சீமான் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
புது தில்லி: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
சீமான் மீதான வழக்கில், 12 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சீமானிடம் வளசரவாக்கம் போலிசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மேல்முறையீட்டு மனு மீது, எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை தொடங்கியபோது, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தன் மீது மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், புகாரளித்த நடிகை இதற்கு முன் 3 முறை புகாரை திரும்பப் பெற்றுள்ளார் என்றும் சீமான் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சீமான் விவகாரத்தில் இரண்டு தரப்பும் உடன்பாடு காணப்படுமா என்று பார்க்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.