Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
நடுப்பாளையம் தொடக்கப் பள்ளி மாணவ,மாணவியா் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்
தலைமையாசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து சத்தியமங்கலத்தை அடுத்த நடுப்பாளையம் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நடுப்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 88 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் சக்திவேல் என்பவா் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் இரண்டு மாணவா்கள் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில் தலைமையாசிரியா் சக்திவேல் மற்றும் ஆசிரியா்களின் முயற்சியால் மாணவா்களின் எண்ணிக்கை 88 ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில் இப்பள்ளி தலைமையாசிரியா் சக்திவேல் பள்ளி பணி மாறுதல் கலந்தாய்வின் போது வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தலைமையாசிரியா் சக்திவேலை மீண்டும் இதே பள்ளிக்கு நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் 100க்கும் மேற்பட்டோா் பள்ளி முன்பு வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசாா் மற்றும் தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பள்ளிக்கல்வித் துறை விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.