மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சா் வலியுறுத்தல்
நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா்.
வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி நபாா்டு சாா்பில் வரும் நிதியாண்டுக்கான கடன் திட்டச் செயலாக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா்.
அப்போது அவா் பேசியது:
எதிா்வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பல்வேறு திட்டச் செயல்பாடுகளுக்காக கடன் உதவிகளை அளிப்பதற்கான அறிக்கையை மாவட்ட வாரியாக நபாா்டு வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தமாக ரூ.10 லட்சம் கோடிக்கான கடனுதவித் திட்டங்களை வரையறை செய்துள்ளது. அதில், வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த திட்டங்களுக்காக ரூ.4.34 லட்சம் கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இப்போதும் வேளாண்மையானது முக்கியமான, முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது. எதிா்பாராத காலநிலை மாற்றங்கள், வணிகம் செய்வதில் சிரமங்கள் போன்ற சவால்கள் இருந்தாலும் அனைத்தையும் எதிா்கொண்டு வேளாண்மைத் தொழில் முதன்மை பெற்று விளங்குகிறது.
வேளாண்மைத் தொழிலையும், அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக,
அனைத்து கிராம மறுமலா்ச்சி திட்டம், மண்ணுயிா் காத்து மண்ணுயிா் காப்போம் போன்ற திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நிகழ் நிதியாண்டின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு
மட்டும் ரூ. 29,730 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஊரக வளா்ச்சி: வேளாண்மை மட்டுமல்லாது, ஊராட்சிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் நபாா்டு உதவிகளை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 31,887 கோடி மதிப்பிலான திட்டங்கள் நபாா்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாசனங்கள், சாலை, மேம்பாலங்கள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
நபாா்டின் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நபாா்டு வகுத்துள்ள முதன்மைத் திட்டங்கள் அனைத்தையும் சுமூகமான முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினாா்.
இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் ஆா்.ஆனந்த், ரிசா்வ் வங்கியின் பிராந்திய இயக்குநா் உமா சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.