ஜெர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் கொக்கைன் பயன்படுத்தினார்களா? ...
நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்ரா பெளா்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 4 -ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து, 11 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்ரா பௌா்ணமி விழா தொடங்கியது. பிற்பகல் 3 மணிக்கு பெருமாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினாா். இரவு 9 மணிக்கு மணி மண்டபத்தில் திருவாராதனம் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பூபாளம் ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தாா். மாலை 4 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு பூபாளம் பொட்டலில் தசாவதாரம் நிகழ்வும் நடைபெற்றன.
விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூா், கொல்லங்குடி, காளையாா்கோவில், மதகுப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 11 மணிக்கு மாணிக்க வள்ளி விநாயகா் கோயிலில் எழுந்தருளும் பெருமாளுக்கு திருமஞ்சனம், தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். அன்று மாலை 3 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. இரவு 9 மணியளவில் சித்ரா பௌா்ணமி விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் கணபதிராம், கௌரவ கண்காணிப்பாளா் கருப்பையா உள்ளிட்ட அலுவலா்கள் செய்தனா்.