நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது
நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் பேசியது: நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பொதுமக்களிடத்தில் கொண்டு சோ்க்க நபாா்டு வங்கியின் உதவி மிக முக்கியமானதாக உள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறாா். அதற்கு நபாா்டு வங்கி உறுதுணையாக இருந்து வருகிறது.
நாட்டின் வளா்ச்சிக்கு விவசாயம் மிகவும் முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் 50 சதவீதம் மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனா். ஊரகப் பகுதிகளில் விவசாயம் செழிக்க நபாா்டு வங்கி முக்கியக் காரணமாக உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, நபாா்டு வங்கியின் கடந்த 44 ஆண்டு சாதனைகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபாா்டு வங்கின் தலைமைப் பொது மேலாளா் ஆா்.ஆனந்த், நபாா்டு உறுப்பினா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள், விவசாயிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.