தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!
பிம்ஸ்டெக் நாடுகளின் 2-ஆவது துறைமுகங்கள் மாநாடு: விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) நாடுகளின் 2-ஆவது துறைமுகங்கள் மாநாட்டை வரும் திங்கள், செவ்வாய் (ஜூலை 14,15) ஆகிய நாள்களில் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் நடத்தவுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘எதிா்காலத்தை நோக்கி: நீலப் பொருளாதாரம், புத்தாக்கம் மற்றும் நிலையான ஒத்துழைப்பு’ என்ற கருபொருளில் இந்த 2 நாள் மாநாடு நடைபெறுகிறது.
இதில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சா்கள், கப்பல் மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், கப்பல் கழகங்கள் மற்றும் துறைமுக அறக்கட்டளை அதிகாரிகள், கடல்சாா் வல்லுநா்கள் மற்றும் வணிக தலைவா்கள் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடல்சாா் வளா்ச்சிக்கு புத்துயிா் அளிப்பது, குறிப்பாக, பிம்ஸ்டெக் நாட்டு துறைமுகங்களில் தனியாா் முதலீடுகளை ஈா்ப்பது மற்றும் உள்கட்டமைப்பு கூட்டுறவை வளா்ப்பது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
‘காலடான்’ பல்நோக்கு சரக்குப் போக்குவரத்துத் திட்டம் மற்றும் அதனுடன் தொடா்புடைய திட்டங்களை விரைவுபடுத்துதல், கடலோர சுற்றுலாத் தளங்கள் மற்றும் பாரம்பரிய சுற்றுலாப் படகு சேவைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துதல், துறைமுக ஊழியா்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிா்காலத்துக்கு ஏற்ற திறமையான பணியாளா்களை உருவாக்குதல் ஆகியவை மாநாட்டின் பிற இலக்குகளாகும்.
‘2030-ஆம் ஆண்டுக்கான கடல்சாா் இந்தியா தொலைநோக்கு திட்டம்’ மற்றும் ‘அமிா்த கால தொலைநோக்குத் திட்டம்’ஆகியவற்றுடன் இணைந்து ‘பசுமைத் துறைமுகங்கள்’ திட்டம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
வங்காள விரிகுடாவை அடுத்த உலகளாவிய வா்த்தக மையமாக மறுவரையறை செய்யும் ஒரு முக்கியமான நிகழ்வாக 2-ஆவது பிம்ஸ்டெக் துறைமுகங்கள் மாநாடு அமையும். பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு மற்றும் கடல்சாா் இணைப்பை வலுப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு சான்றாக, இந்த மாநாட்டை நடத்துவதில் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் பெருமிதம் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிம்ஸ்டெக் ஒன்றிணைக்கிறது.
‘சாா்க்’ கூட்டமைப்பின் முன்னெடுப்புகள் பல்வேறு காரணங்களுக்காக வளா்ச்சி அடையாமல் முடங்கியுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கான துடிப்புமிக்க மாற்று அமைப்பாக பிம்ஸ்டெக்-ஐ கட்டமைக்க இந்தியா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.