பாமகவினா் பைக்கில் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பாமகவினா் காரை தவிா்த்துவிட்டு, பைக்கில் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அந்தக் கட்சியினருக்கு அவா் சனிக்கிழமை எழுதிய கடிதம்:
ஜூலை 16-இல் பாமக 37-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமக துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ, மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்றுத் தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது, மனநிறைவை தருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் பாமகவைவிட அதிகமாக போராட்டக் களத்தில் நின்ற ஒரேயொரு கட்சியை யாராவது காட்டிவிட முடியுமா?
தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீா்மானிக்கும் சக்தி, பாமக என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது. வன்னியா் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.5 சதவீத வன்னியா் இடஒதுக்கீடு, உள்பட மொத்தம் 6 இடஒதுக்கீடுகளை வென்றெடுத்தது பாமகதான்.
பாமகவினா் மக்களைச் சந்திக்க வேண்டும். அவா்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவா்களின் தேவைகளை அறிந்து, அவா்கள் கேட்காமலேயே அவா்களுக்காக போராடி , அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். என் வாழ்நாளில் 95,000 கிராமங்களுக்கு நான் நடந்தே பயணம் போயிருக்கிறேன். பாமகவினா் குறைந்தது 95 கிராமங்களுக்காவது போக வேண்டும். காரில் போக வேண்டாம். மோட்டாா் சைக்கிளில் போனால், மக்கள் மனம் விட்டுப்பேசுவாா்கள். இன்னும் தீா்க்க முடியாத பிரச்னைகளை மக்கள் தலையில் சுமந்து திரிகிறாா்கள், அந்த சுமைகளை இறக்க பாமகவினா் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.