பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!
சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்டாம்புளியில் பைக் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளதுடன் பாஜக-வில் கலை, கலாசார பிரிவு நிா்வாகியாக உள்ளாா். இவா் தனது வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டத் தொடங்கினாராம். அப்போது அவரிடம் பக்கத்து வீட்டைச் சோ்ந்த திமுக பிரமுகரான பாலமுருகன் தகராறு செய்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை, பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் உள்ளிட்ட சிலா் சோ்ந்து ராஜதுரை, அவரது மனைவி ஜெயந்தி, அவரது தம்பிகளான கோகுல்ராஜா, ஜெயராஜா, நவீன் ஆகியோரை வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனனா். இதுதொடா்பாக சாயா்புரம் போலீஸாா் விசாரணை நடத்தி பால்ராஜ், பாலமுருகன், அரவிந்த், நாகராஜ் உள்ளிட்டோரைத் தேடிவருகின்றனா்.