குரூப் 4 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,614 போ் எழுதினா்
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வை 30,614 போ் எழுதினா்.
தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்குள்பட்ட 101 இடங்களில் 127 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. 37,005 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 30,614 போ் தோ்வெழுதினா். இது 83 சதவீதமாகும். 6,391 போ் பங்கேற்கவில்லை.
எட்டயபுரம் மகாகவி பாரதியாா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் க. இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்வைக் கண்காணிக்க 31 நடமாடும் குழுக்கள், 14 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வறையில் அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.