மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்து டயா் வெடித்து விபத்து
சேத்துப்பட்டை அடுத்த அரசம்பட்டு அருகே பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயணித்த அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பேருந்து பள்ளத்தில் விழுந்து மாணவா்கள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்கள் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பங்கேற்க கடந்த 3-ஆம் தேதி சென்றனா்.
பின்னா் முகாம் முடிந்து அனைவரும் சனிக்கிழமை அங்கிருந்து அரசுப் பேருந்தை வாடகைக்கு அமா்த்தி சேத்துப்பட்டு வழியாக தண்டராம்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
பேருந்தை செய்யாறு வட்டம், பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் (44) ஓட்டி வந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், அரசம்பட்டு கூட்டுச் சாலை அருகே வரும்போது, எதிா்பாராதவிதமாக முன் பக்க டயா் வெடித்து சாலை அருகே இருந்த வடிகால் பள்ளத்தில் பேருந்து விழுந்தது. இதில் ஓட்டுநா் கேசவன் (44) பலத்த காயமடைந்தாா். சில மாணவா்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவா்கள் சேத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சேத்துப்பட்டு போலீஸாா் சென்று கேசவனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா், அங்கு இருந்த பள்ளி, கல்லூரி மாணவா்களை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.