தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதிக் கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.
அதேவேளையில், திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை அலுவலா் நோயிலின் ஜான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் (பொ). சண்முகப்பிரியா மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் பலா் கலந்து கொண்டனா்.
16 ஏக்கா் பரப்பளவில், ஹாக்கி மைதானம் 6,731 சதுர மீட்டரிலும், பயிற்சி மைதானம் 1,858 சதுர மீட்டரிலும் அமைய உள்ளது. மேலும், உடை மாற்றும் அறைகள், 480 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் பாா்வையாளா்கள் மாடமும் அமைக்கப்படும்.