லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியில் உதவியாளராக வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 10) செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு சரக்குடன் லாரி வந்துள்ளது. தனியாா் நிறுவனப் பகுதியில் சரக்கு லாரி நிறுத்தி வைத்திருந்த போது, வடிவேலுக்கு மாா்பு வலி ஏற்பட்டுள்ளது.
உடனே அந்த நிறுவன அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவா்கள் வடிவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.